×

ஸ்ரீவைத்திய வீரராகவர் கோயில் வளாகத்தில் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அவதி

திருவள்ளூர்: ஸ்ரீவைத்திய வீரராகவர் கோயில் வளாகத்தில் நேற்று பெய்த மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் பக்தர் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பெரியகுப்பம், ஈக்காடு, காக்களூர், பூண்டி, புல்லரம்பாக்கம், கடம்பத்தூர் மணவாளநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. வழக்கமாக பிரதி வாரம் திங்கள் கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள்.

இந்நிலையில் திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மழையில் நனைந்தபடியும், பலர் வரமுடியாமலும் தவித்தனர். மேலும் கால்நடைகளும் இந்த மழையால் பாதிக்கப்பட்டன. மேலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மாற்றுத் திறனாளி தேங்கியிருக்கும் மழை நீரில் நடந்து செல்லமுடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற சம்பவமும் அரங்கேறியது.

அதே போல் திருவள்ளூரில் உள்ள பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் நோய்கள் தீரவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவில் வளாகத்தில் சிறிது மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நின்று நோய் தொற்று ஏற்படும் வகையில் இருப்பதால் பக்தர்கள் பெரும் அவதியுற்று வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் முழங்கால் அளவிற்கு மழை நீருடன் கழிவுநீர் கலந்து நின்றதால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் இது போன்ற அவல நிலை தொடராமல், கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்காத அளவிற்கு வடிகாலை ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை விடுத்தனர்.

The post ஸ்ரீவைத்திய வீரராகவர் கோயில் வளாகத்தில் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Srivaithiya Veeraragavar temple complex ,Tiruvallur ,Tiruvallur… ,Srivaithiya ,Veeraragavar ,temple ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...